கோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் குறித்த அறிமுகம் - திரு ஹாரன் பிரசன்னா

மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018)


இந்த புத்தகத்தை வாங்க (Dail For Books) - +919445901234 என்ற கைபேசியை அழைக்கவும்

மறைக்கப்பட்ட பக்கங்கள் - உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர்.
ஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். முதலில் தனியே வெளியிடும் எண்ணமே இருந்தது. ஆனால் புத்தகத்தைப் படித்து, எடிட் செய்து முடித்ததும் அது கிழக்கு பதிப்பகம் போன்ற ஒரு பதிப்பகத்தின் வழியே வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். தற்போது, மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகிறது.
இந்நூலில் ஆண் பெண் பாலினம் தவிர இன்னும் எத்தனை வகையான பாலினங்கள் உள்ளன என்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ள தன்மைகள் என்ன, அவர்கள் எப்படி ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு (Gender and Sexual orientation) என்பதற்குரிய விளக்கத்தைப் புரிந்துகொண்ட பின்னர்தான் இந்தப் புத்தகத்துக்குள்ளேயே நம்மால் செல்லமுடியும். இதற்குரிய விளக்கத்தின் மூலம்தான் தங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார் கோபி ஷங்கர். இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாமல்தான் இச்சமூகம் உள்ளது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோபம்.
ஆண் பெண் பாலியல் உறவுகள் தாண்டி நிலவும் உறவு நிலைகளைப் பற்றி மிக விரிவாக இந்நூலில் பேசியுள்ளார் கோபி ஷங்கர். ஹோமோ மற்றும் லெஸ்பியன் உறவுகள் தாண்டி, பல்வேறு உறவுநிலைகளை இப்புத்தகம் விளக்குகிறது. அதேபோல் ஹோமோ மற்றும் லெஸ்பியம் உறவுநிலைகள் இந்த உலகத்தில் தொன்றுதொட்ட காலம் முதலே இருந்திருக்கவேண்டும் என்பதை வரலாற்றையும் புராணத்தையும் உதாரணமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். உலக வரலாற்றின் பாலியல் உறவுகளின் நிலைகளையும், ஆண் பெண் உறவு நீங்கலாகப் பிற உறவுகள் கொண்டிருந்தவர்களின் சமூக நிலையையும் மிக விரிவாக எழுதியுள்ளார் கோபி ஷங்கர்.
Lesbian, Gay, Bisexual, Transgender and Intersex (LGBTI) குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதன் வலியையும் பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர். இந்தியா முழுமைக்கும் திருநங்கைகளுக்கு இருந்த இடம், இந்தியப் பண்பாட்டில் அவர்களுக்கு இருந்த மதிப்பு, அதேசமயம் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, இன்று மெல்லத் தெரியும் வெளிச்சம், அது நீடித்துத் தொடருமா என்கிற ஏக்கம் எனப் புத்தகம் பல்வேறு செய்திகளை, நாம் இதுவரை அறிந்திராத பின்னணிகளைப் பட்டியலிடுகிறது. ஆண் பெண் என்ற இரண்டு பாலினங்கள் தாண்டி மூன்றாவது பாலினத்தை படிவங்களில் குறிப்பிடக்கூட உரிமையற்ற நிலையை நீக்கப் போராடும் இடத்தில் இச்சமூகம் உள்ளது.
இதுவரை இதுதொடர்பான இத்தனை விரிவான புத்தகம் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பெரிய பாய்ச்சல்.
இப்புத்தகத்தின் ஆகப்பெரிய இன்னொரு சாதனை என்று பார்த்தால், அனைத்து வகையான உறவு நிலைகள், பாலியல் நிலைகள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தை சொல்ல முயல்வது. இது பாராட்டப்படவேண்டியது. தமிழின் செழுமைக்கு இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் உதவும். அதேபோல் உலக வரலாற்றில் உள்ள LGBTI குறித்த தகவல்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பது முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.
இந்நூலில் எனக்குள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினத்துக்குள் உள்ள உறவுநிலையைவிட மற்ற உறவுநிலையே மேம்பட்டது என்று தோன்றும் அளவுக்கு இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போன்ற ஒரு மயக்கம். இது மயக்கம்தான், அப்படி நூல் சொல்லவில்லை, சொல்லக் காரணமும் இல்லை. புறக்கணிக்கப்பட்டதன் வெறுப்பும் எரிச்சலும் இப்படி வெளிப்படுகிறதெனப் புரிந்துகொண்டேன். இன்னொரு பிரச்சினை, திருநங்களைகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் கூடத் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இடையிலங்கத்தவர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களுக்குள்ளான பிரிவு வேதனை அளிக்கிறது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையுடன் இதைத் தாண்டத்தான் வேண்டும்.
இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலக வரலாற்றைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்கள் சரியான உச்சரிப்பில் சொல்லப்படவில்லை என்பது இன்னொரு குறை. இதை அடுத்த பதிப்பில் சரி செய்யவேண்டும்.
இப்புத்தகத்தின் தொடக்க பக்கங்கள், பாலினங்களையும் பாலியல் ஒருங்கிணைவையும் பட்டியலிடுபவை. இப்பக்கங்களில் நாம் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கிறோமோ எனத் தோன்றலாம். ஆனால் இப்பக்கங்கள் மிக முக்கியமானவை. தவிர்க்க இயலாதவை. தமிழில் இவையெல்லாம் கிடைக்கவேண்டியது மிக அவசியம். எனவே இவற்றைத் தாண்டித்தான் நாம் இப்பிரச்சினைக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் நுழைந்தாகவேண்டும்.
முக்கியமாக நான் நினைத்த ஒரு விஷயம், உலகில் உள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற அவதூறுகளையும்கூட கோபி ஷங்கர் நம்ப முனைகிறாரோ என்பது குறித்து. பொதுவாகவே இதுபோன்ற புத்தகங்கள் தங்களுக்கு ஆதரவான எந்தக் குரலையும் தவிர்க்க முனையாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஆதாரமற்ற குரல்களை ஏற்பது தற்சமயத்தில் உதவினாலும் நீண்டகால நோக்கில் அது நமக்கே எதிரானதாக அமையும். இதைப் புரிந்துகொண்டு கோபி ஷங்கர் எதிர்காலத்தில் அனைத்தையும் அணுகுவது அவருக்கு உதவலாம்.
மற்றபடி, இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய திறப்பு. அரிய வரவு. முகச்சுளிப்போடும் அருவருப்போடும் நாம் கடந்துசெல்லப் பழக்கப்பட்டிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் ஆவணம் இது. இதைப் புரிந்துகொண்டால்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதில் உள்ளது இப்புத்தகத்தின் அடிப்படைத் தேவை. கோபி ஷங்கர் போன்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.