அக். 26 - சர்வதேச இடையலிங்கத்தவர் விழிப்புணர்வு நாள் (Updated on Dec 7 2016)



இடையலிங்கத்தவர்: பாலினம் - தெரிந்ததும் தெரியாததும் - தி இந்து

அந்தக் காணொலியில் தகப்பனும், மகளும் பேசிச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மனைவிக்கு பிரசவ வலி என போன் அழைப்பு வருகிறது. இருவரும் மருத்துவமனைக்கு விரைகின்றனர். அங்கே மருத்துவரின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் தந்தை. என்னவென்று பார்த்தால், குழந்தை இடையலிங்கத்தவராகப் பிறந்திருக்கிறது. (இடையிலிங்கத்தவர் (Intersex) - ஆண், பெண் என்ற வரையறைக்குள் வராமல் இரண்டு பாலினப் பண்புகளோடு பிறக்கும் உயிர்)

அதிர்ந்து நிற்கும் பெற்றோரிடம், குழந்தையும் நம் குடும்பத்தில் ஓர் அங்கம் என வரைந்து காட்டுகிறார் மகள். இதுவும் ஓர் இயல்பான நிலைதான் என்று பெற்றோர் தங்கள் குழந்தையின் பிறப்பைச் சரியாகப் புரிந்துகொள்கின்றனர்.

இந்த காணொலியை வெளியிட்டுள்ள ஐ.நா. 1.7 சதவீதம் வரையிலான குழந்தைகள் இடையலிங்கத்தவர்களாகப் பிறக்கிறது என்ற விவரத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச இடையலிங்கத்தவர் குறித்த விழிப்புணர்வு நாளான இன்று இடையலிங்கத்தவர் குறித்த அறியப்படாத தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், இடையலிங்க இளைஞரான கோபி ஷங்கர்.

XX குரோமோசோம்களோடு பிறப்பவர்கள் பெண்களாகவும், XY குரோமோசோம்களைக் கொண்டவர்களை ஆண்களாகவும் வகைப்படுத்துகிறோம். XXX, XYX உள்ளிட்ட 14 வகையான குரோமோசோம் மாறுபாடுகளோடு பிறப்பவர்களை இடையலிங்கத்தவர் என்கிறோம்.
பிறக்கும்போது இந்த மூன்று வகையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், பெரும்பாலானவர்கள் ஆண், பெண் என்ற இரண்டு உடல்கூறுகளோடும் (இடையலிங்கத்தவராக) பிறக்கும் குழந்தைகளை, குறைபாடுகளோடு பிறந்துவிட்டதாக நினைத்து அதை மாற்ற முயற்சிக்கிறார்கள். சொல்லப்போனால் மருத்துவர்களுக்கே இடையலிங்கத்தவர் குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை.

வேண்டுகோள் என்ன?
இடையலிங்கத்தவர்களின் பிறப்பை வியாதியாகவோ, எதார்த்தத்துக்குப் புறம்பாகவோ பார்க்க வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோள்.

திருநங்கைகள் பிறந்து, வளர்ந்து உடலில் மாற்றம் தெரியும்போதுதான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் இடையலிங்கத்தவரோ, தாங்கள் பிறந்த உடனேயே இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உடல்ரீதியான பிரச்சினைகளையும், அதனால் சொல்ல முடியாத மன அழுத்தங்களையும் கொண்டிருக்கிறோம். இதற்காக திருநங்கைகளின் பிரச்சினைகளை நான் குறைத்துக் கூறவில்லை. ஆனால் வெளியில் அறியப்படாத எங்களின் பிரச்சினைகள் வெளியுலகத்துக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கழிவறையைப் பயன்படுத்துவதில்கூட எங்களுக்குப் பிரச்சினை எழுகிறது. வேலை நேரமாக வெளியே செல்லும் நேரங்களில் நிறைய முறை, கழிவறைக்குச் செல்ல முடியாமல் அடக்கி வைத்திருக்கிறேன். தங்கள் உடல் சார்ந்த தெளிவு ஏற்படாத பல இடையலிங்கத்தவர் தற்கொலை வரை சென்றிருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

உலகளாவிய அளவில் இப்போதுதான் எங்களின் பிரச்சினை கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன, இலங்கைப் பிரச்சினைகளுக்கு முன்பாக, இடையலிங்கத்தவர்கள் குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் இடங்களை இழந்து தவிக்கின்றனர். நாங்களோ எங்களின் உடலைக்கூட சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறோம்.

அரசு முன்னெடுக்க வேண்டும்
மால்டா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடையலிங்கத்தவர்களை முறையாக அங்கீகரித்து, அவர்களுக்கான சட்ட, குடியுரிமை வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுகுறித்த முறையான விழிப்புணர்வு இல்லை. திருநங்கைகள் குறித்த சரியான புரிதலே தற்போதுதான் ஏற்படத் தொடங்கியிருக்கிற நிலையில், இந்திய சமூகம் எங்களையும் அங்கீகரிக்க வேண்டும்.

மாற்றுப் பாலினத்தவருக்கான மசோதாவில் இடையலிங்கத்தவர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எங்களுக்கென தனியாக சட்டமோ, அல்லது அதே மசோதாவில் திருத்தமோ கொண்டு வரப்பட வேண்டும்.

இந்திய அரசு இதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும். விழிப்புணர்வு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இடையலிங்கத்தவர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' என்று கூறுகிறார்.

ஐ.நா. வெளியிட்ட காணொலியைக் காண



No comments:

Post a Comment