கோபி ஷங்கர் ஓர் இலை போல் - © மருதன்

Gopi Shankar Madurai at NHM Office, Photo: © Marudhan Gangadharan

ஓர் இலை போல் மெலிந்து தோற்றமளிக்கிறார் கோபி ஷங்கர். சன்னமான குரலில்தான் உரையாடுகிறார். வாசிப்பு, எழுத்து, ஆய்வு, சமூகச் செயல்பாடுகள் என்று பல தளங்களில் அவரை விரிவாக அறிமுகப்படுத்த இயலும் என்றாலும் இருப்பதிலேயே சிக்கலானதும் சவாலானதுமான ஓர் அடையாளத்தைச் சொல்லி இந்தக் குறிப்பை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோபி ஷங்கர் ஓர் இன்டெர்செக்ஸ் மனிதர். தமிழில், பால் புதுமையர்.

சிறுபான்மையினருக்கு உள்ளே நாங்கள் ஒரு சிறுபான்மையினர் என்கிறார் அவர். திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வே இன்னமும் போதுமான அளவுக்கு வளராத நிலையில் இன்டர்செக்ஸ் பிரிவினர் பற்றிய அடிப்படைகள்கூட இன்னமும் சமூகத்தின் காதுகளைச் சென்றடையவில்லை என்று வருந்துகிறார். கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதையே தன்னுடைய பணியாக அவர் வரித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பணி ஒரு பெருஞ்சுமையாகவும் பல சமயங்களில் பெருந்துயராகவும் அவரை அழுத்திக்கொண்டிருப்பதை அவருடன் பேசும்போது உணரமுடிகிறது.

மேற்குலக நாடுகளில் பல கருத்தரங்குகளில் கோபி ஷங்கர் பங்கேற்றிருக்கிறார். நீங்கள் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களைக் கரிசனத்தோடும் புரிதலோடும் அங்கே அணுகுகிறார்கள். நீங்கள் உங்களை விநோதமானவராகவோ குறைபாடு கொண்டவராகவோ உணரவேண்டியிருக்காது. ஆனால் இங்கே அத்தகைய அணுகுமுறையை நோக்கிச் செல்வதற்கான முதல் படியைக்கூட நாம் எடுத்து வைக்கவில்லை என்கிறார்.

அறிவியல், மதம் இரண்டுமே அவரை ஆற்றுப்படுத்துகின்றன. இந்த இரண்டையும் அவர் எதிரெதிரே நிறுத்தி மோதவிடுவதில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் ஜுடித் பட்லர், Bracha Ettinger ஆகியோரின் படைப்புகளிலிருந்து பெற்றுக்கொண்ட பார்வைகளையும்
ஒன்றுபோல் பரவசத்துடன் அவரால் விவரிக்கமுடிகிறது. அவர் அறிந்துவைத்திருக்கும் இந்து மதம் மிகுந்த நெகிழ்வுதன்மை கொண்டதாக இருக்கிறது. அதே சமயம், அந்த இந்து மதம் அரசியலோடு இணையும்போது வேறொன்றாக மாறுவதையும் அவர் கண்டிருக்கிறார்.

பாலினச் சிறுபான்மையினர் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசியல் அமைப்புகள் உதவக்கூடும் என்னும் நம்பிக்கையில் இடது, வலது வேறுபாடின்றி பலரோடு அவர் உரையாடியிருக்கிறார், சில சமயம் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் அந்த அனுபவம் அவருக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. எங்களுடைய செயல்திட்டத்தை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்று நினைக்கிறேன் என்கிறார்.
கோபி ஷங்கரின் செயல்திட்டம் விரிவானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. உதாரணத்துக்கு, பாலினம் என்றால் ஆண், பெண் அல்லது திருநங்கை என்று எல்லை வகுத்துக்கொள்ளவேண்டாம்; இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றன என்று அவர் கவனப்படுத்துகிறார். ஒருவர் தான் எப்படி இருக்க விரும்புகிறாரோ அப்படி இருக்க அவரை அனுமதிக்கவேண்டும். பால், பாலினம், பாலியல் ஈர்ப்பு ஆகியவற்றை நாம் நுணுக்கமாக அறிந்துகொள்ளவேண்டும். நீங்கள் என்னவாகப் பிறந்திருக்கிறீர்கள் என்பதற்கும் நீங்கள் உங்களை என்னவாக உணர்கிறீர்கள் என்பதற்குமான வேறுபாடு முக்கியமானது என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்களை அறிந்த அளவுக்குப் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற விரும்பியவர்களை நாம் அறிந்துகொள்ளவில்லை. Genderqueer (பால் புதுமையினர்) என்னும் தொகுப்பின்கீழ் இடம்பெறும் மனிதர்களையும் அவர்களுடைய சிக்கல்களையும் பற்றி நாம் இன்னும் உரையாடக்கூட ஆரம்பிக்கவில்லை என்கிறார் கோபி. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பாலியல் ஈர்ப்பு இருக்கலாம். இது அவருடைய தனிப்பட்ட உரிமை. மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் சமூக ஆய்வாளர்களும் இந்தப் புரிதல்களை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து சமூகம், அரசு என்று மற்றவர்களும் விழிப்புணர்வு பெறுவார்கள் என்கிறார்.

அருந்ததி ராயின் புதிய நாவல் எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைப் பல பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்கிறார் கோபி. இன்டர்செக்ஸ், மாற்றுப் பாலினத்தவர், திருநங்கை ஆகியோர் ஒன்றல்ல, அவர்கள் வெவ்வேறானவர்கள் என்று நாங்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறோம். ஆனால் அருந்ததி ராயின் நாவல் இந்த வேறுபாடுகளைத் தகர்த்து அனைவரையும் ஒரே பொட்டலத்தில் கட்டிப் போட்டிருக்கிறது; போதுமான ஆய்வுகளின்றி அவர் இதனை எழுதியிருப்பது தெரிகிறது என்று வருந்துகிறார். 'மறைக்கப்பட்ட பக்கங்கள் : பால் - பாலினம் - பாலியல் ஒருங்கிணைவு' என்னும் தலைப்பில் கோபி ஷங்கர் எழுதிய விரிவான நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. இது போக, தன்னுடைய வாழ்க்கை, போராட்டம் இரண்டையும் அறிமுகப்படுத்தும் ஓர் எளிய நூலையும் அவர் தற்சமயம் எழுதிவருகிறார்.

கோபியின் கட்டுரைகள் விர்ஜினியா பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. இவர் கொலம்பியா, ஜார்ஜ் வாஷிங்டன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாலினங்கள் குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்தியாவின் இளம் வேட்பாளர். 2015ம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத்துக்கு மாற்றுப் பாலினத்தவர் மசோதா தாக்கல் செய்ய சாட்சிக்காக அழைக்கப்பட்டிருக்கிறார். மதுரையில் செயல்படும் சிருஷ்டி என்னும் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர்.

இது இயல்பான குழந்தையல்ல என்று கருதி அறுவை சிகிச்சை செய்து 'திருத்த' முயலும் மருத்துவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். பிறந்தவுடனே இத்தகைய குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.நான் ஏன் மற்றவர்கள் போலில்லை என்று தவித்து, தகுந்த ஆலோசனையோ வழிகாட்டுதலோ கிடைக்கப்பெறாமல் அவமானத்தில் குமைந்து வருந்துபவர்கள் ஏராளம் பேர். சாதாரண ஓட்டுநர் உரிமம் ஒன்றைப் பெறுவதற்குக்கூட நான் நிறைய கஷ்டப்படவேண்டியிருக்கிறது என்கிறார் கோபி.

கோபி ஷங்கரின் சில ஆங்கில, தமிழ் கட்டுரைகளும் உரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. நாம் வாழும் அதே உலகில் வேறு பல உலகங்களும் இருப்பதை அவை உணர்த்துகின்றன. - © மருதன் 

This post was first published by Writer Marudhan on his Facebook. Published on Srishti Madurai blog with consent.