- ”பாலினம்” என்றால் என்ன? ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா?
- இல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா?
- இருக்கின்றன! எக்கச்சக்கமாக இருக்கின்றன!
என போன தொடர் முடிந்திருந்தது. ஆமாம் அதுதான் தெரியுமே… மூன்றாவது திருநங்கைகள் … ஆனால் உண்மையில் அந்த பெரும் போர்வைக்குள் பல்வேறு பாலினங்கள் உள்ளன. கிருஷ்ணன் பகவத் கீதையில் ஸ்வபாவம் என ஒன்றை கூறுகிறான். தன்னியற்கை. இந்த தன்னியற்கை என்பது பன்மைத்தன்மை கொண்டது. எல்லா தளங்களிலும் செயல்படுவது. இந்த பெரிய உண்மையை கண்ணன் சொன்னான். நாம் வழக்கம் போல நம் சமுதாய அதிகார மோகத்துக்கு அதை பிறப்படிப்படையிலான சாதியை சொல்வதாக குறுக்கிவிட்டோம். ஆனால் கண்ணன் தன்னியற்கை குறித்து கூறியதை பாலினங்களுக்கும் விரிக்க முடியும். மறைநூல்களின் பெரும் அழகே அதுதான். அவற்றின் தொன்மங்கள் தொடங்கி அவற்றிலுள்ள தரிசனங்கள் வரை பல தளங்களில் விரித்திட இயலும். இயல்பாக மானுட மனம் விரிவடைய தடையாக இருக்கும் சில கசடுகளை அவை நீக்கிடும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றை அப்படி விரித்திட புத்தியும் அதற்கும் மேலாக இதயமும் வேண்டும்.
- ஒருவருடைய பாலினத்தை தீர்மானிப்பது எது?
- ஒருவரின் உடல் அமைப்பா? சமூகத்தின் கண்ணோட்டமா?
- இரண்டுமே இல்லை.
பாலினம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் உரிமை, சுகந்திரம், விருப்பம், இயற்கை. இவற்றை ’இவை இப்படித்தான். இப்படி மட்டும்தான்’ என ஒரு எல்லைக்குள் சுருக்குவது என்பது சரியல்ல. அது ஒரு அடக்குமுறை. பெரும்பாலான மதங்களும் அரசியல் சித்தாந்தங்களும் மனித உடலின் மீது தனி மனிதனுக்கு உள்ள உரிமையைத்தான் முதலில் அழிக்கின்றன. அவற்றை தம் அதிகார பீடங்களால் கையகப்படுத்துகின்றன. இதை நாம் உணருவது கூட இல்லை. இதை நாம் அனுமதித்துவிடுகிறோம். ஆனால் இவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பாலின அடிப்படையிலான அதிகார அடுக்குகளை கேள்விக்குட்படுத்தியவர்!வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு படு சுட்டியான சிறுவன். அவன் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட விடுவதே ஒரு கீழ்மையான செயல் என நினைப்பவர்கள் சமுதாயத்தின் மேல்மட்டங்களில் வாழ்ந்தனர். அப்படி ஒருவர்தான் துர்காதாஸ்.அவர் தன் வீட்டு பெண் குழந்தைகளை கோஷாவுக்குள் வளர்த்தார். தன் வீட்டு பெண்களை பிற ஆண்கள் பார்க்க முடியாது என்று ஜம்பம் அடிப்பார். அந்த சிறுவனுக்கு இது பிடிக்கவில்லை. துர்காதாஸின் பெண் குழந்தைகளுடன் விளையாட கிராம பெண் குழந்தைகள் மட்டும் அவர் வீட்டுக்கு செல்லலாம். ஒரு நாள் புதிதாக ஒரு பெண் குழந்தை வந்தாள். தான் நெசவாளர் பெண் என்றும் கிராமத்துக்கு புதிது என்றும் சொன்னாள். அந்த ஜமீன்தாரின் பெண் குழந்தைகளுடன் நன்றாக விளையாடினாள். வீட்டு பெண்களுடன் நன்றாக பேசினாள். நாள் முழுக்க ஆடலும் பாடலும் வித விதமான கிராமத்து விளையாடல்களுமாக கழிந்தன. அன்று மாலை துர்காதாஸின் கண் முன்னாலேயே அந்த புதிய பெண் குழந்தையை தன் அலங்காரங்களை கலைத்து கொண்டு தனது சகோதரன் அழைத்த போது ஓடி சென்ற போதுதான் துர்காதாஸுக்கு புரிந்தது. அது அவள் அல்ல அவன். அந்த சிறுவனேதான்… அவன் பெயர் கதாதரன்… பின்னாட்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
இன்று அறிவியல் என்பது நமக்கான தேவைகளை எளிமை படுத்தவும், சுலபமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கையை புறத்தில் எளிமையாக்க வசதியாக்க பல தொழில்நுட்பங்கள். தானியங்கி வண்டிகள் நம் போக்குவரத்துக்கு; குளிர்சாதன பெட்டிகள்; சந்திரனுக்கு பயணம், செவ்வாய் கிரகத்துக்கு பயணம். இவ்வளவு செய்த நாம் ஒரு தனி மனிதனின் உணர்வுகளை மதிப்பதற்கு ஒன்றும் முயற்சி எடுக்கவில்லை. அதை அறிந்துகொள்ள கூட வாய்ப்புகளை புற உலகை ஆராய்ந்த அதே வேகத்துடன் ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக வேற்று பாலினத்தாரை மட்டுமல்ல ஒரே பாலினத்துக்குள்ளே இருக்கும் வேறுவித பாலின ஈர்ப்பாளர்களைக் கூட சரியாக நாம் அறிந்து கொள்ளவில்லை. பலருக்கு வேற்று பாலினங்களுக்கும் வேற்று பாலின ஈர்ப்புகளுக்கும் உள்ள வேறுபாடு கூட தெரிவதில்லை.
இப்படி பாருங்கள்: ”பசி” என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு உணர்வு. பசிக்கும்போது நம்மை ஒருவர் “நீ இதைத்தான் சாப்பிடனும்” என்று நமக்கு பிடிக்காத ஒரு உணவை சாப்பிட சொன்னால் என்ன செய்வது? நமக்கான உணவை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது நமக்கு வேண்டும். அதேபோல “காமம்”, “பாலின ஈர்ப்பு” என்கிற விஷயங்கள் கூட தனிமனிதனின் ஒரு உணர்வு. அந்த உணர்வில் நம் சமூகத்தை காரணம் காட்டி, இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமைகளை பறிக்கும் செயல்தான். பசிக்கு மட்டுமல்ல பாலின ஈர்ப்புக்கும் இதுதான் உண்மை. இன்னொரு விதத்திலும் சொல்லலாம்: எல்லோரும் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை தவறாக பார்ப்பது எவ்வளவோ அறிவற்ற செயலோ அதே போலத்தான், எல்லோரும் எதிர்பால் ஈர்ப்பு கொண்டிருக்கும்போது சிலர் மட்டும் சமபால் ஈர்ப்பாளர்களாக இருப்பதை பார்த்து குற்றம் சொல்வதும்.
சமபால் ஈர்ப்பு என்பது மேற்கத்திய தாக்கத்தின் விளைவு என்ற பொய் பிரச்சாரங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல நம் இந்தியாவின் பண்டைய வரலாறும் ஆன்மிக மரபுகளும் ஆராயப்பட்டால் இதைப்போன்ற விஷயங்கள் மானுடம் தோன்றியது முதல் என்றும் இருப்பதுதான் என்று உரக்க சொல்லும் உண்மைகள் வெளிப்படும். மேற்கத்திய வரலாறுகள், இந்திய வரலாறுகள், பாலினங்கள் தொடர்பாக நடக்கும் அரசியல், பால் உரிமைகள் மறுக்கப்பட்டு புலம் பெயர்ந்த அகதிகள், என்று இதை உலகியல் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாமல் அறிவியல், மருத்துவம், உளவியல் போன்ற கண்ணோட்டத்திலும் இவை பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாவிட்டால் உலகத்துக்கு ஒரு வளமையான மாற்றுப்பாலின பண்பாட்டை அளித்த ஒரு பரிமாணம் பாரத பண்பாட்டிலிருந்து அழிந்துவிடும். உலகெங்கும் வாழும் பாலின சிறுபான்மையினருக்கு அது எப்படிப்பட்ட ஆன்மிக இழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன!
சமூகம் சில விஷயங்களை திணிக்கும்போது, சிலர் உரிமைகளை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆணும் பெண்ணும் மணந்தால்தான் அது இல்லறமாக கருதும் சமூகம், ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ இணைவதை விரும்பவில்லை. அதற்கு பலத்த எதிர்ப்பையும் காட்டப்படுகிறது. சமூகத்தின் நிர்பந்தத்தால் பல ஒருபால் ஈர்ப்பாளர்களும் எதிர்பாலினத்தவரை மணம் புரிந்து, வாழ்க்கை முழுவதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படி பல தனி மனிதர்களும் துன்பத்தை அனுபவித்துதான் ஒரு சமூகம் தன் கட்டமைப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? உண்மையில் பாரதத்திலும் அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்தன. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அந்த இடத்தைதான் கண்டடைந்து பின்னர் மீட்டெடுத்து விரிவாக்க வேண்டும். அதைத்தான் சிருஷ்டி செய்கிறது.
எனக்கான பசியை, வலியை, இன்பத்தை, துன்பத்தை உங்களுக்கு நான் உணர்த்த முடியாது. அவற்றை விளக்குவதன் மூலம் அதில் இருக்கும் உண்மையை உங்களுக்கு உணர்த்தலாமே தவிர, முழுமையாக என் உணர்வுகளை வேறு ஒருவருக்கு வெளிப்படுத்த முடியாது. அதேபோலத்தான் பாலின ஈர்ப்பு என்கிற எண்ணமும். பிறக்கும் பிறப்பு, வளரும் விதம், சேரும் சேர்க்கை, வாழும் சூழ்நிலை, கற்ற அனுபவம் - இவை அனைத்தும் தாக்கங்கள் அளித்தாலும் இவற்றின் மூலம் மட்டுமே இது தீர்மானிக்கப்படுவதில்லை. இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை? என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா? இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.
மெக்காலே கல்வி அமைப்பு திணிக்கப்பட்ட நம் இந்திய சமூகத்தில் பாலினம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை. பதின்மவயது மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி போதிக்கப்படுவதில்லை. பெற்றோர்களும், ஆசிரியகளுமே பாலினம் பற்றியும் ஈர்ப்பு பற்றியும் தெளிவான மனநிலையோடு இல்லை. பாலினம் பற்றி பேசினாலே குற்றம் என்ற அளவில் அணுகுகிறார்கள். பாலினம் பற்றியும், பாலின ஈர்ப்பு பற்றியும் அடிப்படை தெளிவு கூட இங்கு அமையவில்லை. அதற்கான களமும் இதுவரை அமைக்கப்படவில்லை. பாலினம் பற்றியும் உணர்வுகள் பற்றியும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒதுங்கி நிற்பதால் அந்த பிள்ளைகளே அவற்றை தேட முற்படுகின்றனர். இந்த நவீன யுகத்தில் இணையம், ஊடகங்கள் என்று அவர்கள் தேடும் போது அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் உடலுறவு சம்மந்தப்பட்ட இச்சைகள் மட்டுமே. அதை தாண்டிய ஒரு விழிப்புணர்வும், தெளிவும் அவர்களுக்கு கொடுக்கப்படாததால், அந்த இச்சைகளுக்கு அவர்கள் அடிமையாகிவிடுகிறார்கள். எனவே இன்றைய சூழலில் பாலினக்கல்வி என்பது மேலும் அவசியமாகிறது.
[இங்கு பேசப்படுவது பாலினக்கல்வியை குறித்து பாலியல் கல்வியைக் குறித்து அல்ல. பாலியல் கல்வி என்பதும் அவசியமானதுதான். அது குறித்து பின்னர் பார்க்கலாம்.]
பாரத பண்பாடும் பாலினக்கல்வியும்பாலினக்கல்வி என்றால் அது மேற்கத்திய பாணியில் இருக்க வேண்டியதில்லை. நம் புராண இதிகாசங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒருவரின் பாலினம் என்பது நெகிழ்ச்சி தன்மை கொண்டது என்பதை ஒரு குழந்தைக்கு எப்படி சொல்வது? மகாபாரதத்திலிருந்து தொடங்கலாம். அர்ஜுனன் பிருகன்னளையாக வாழ்ந்த கதை இருக்கிறதே. அது சாபமல்ல வரம் என்பதை சொல்லமுடியும். சிகண்டியின் கதை பிரசித்தி பெற்றது. யட்சன் ஸ்தாணுகர்ணனும் சிகண்டியும் தங்கள் பாலினங்களை பரஸ்பரம் மாற்றிக் கொண்டதாகக் கூட மகாபாரதம் கூறுகிறது. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. உதாரணமாக தேவி பாகவதத்தை எடுத்துக் கொள்ளலாம். சுத்தியும்னன் என்கிற அரசன் குமாரவனம் எனும் காட்டிற்குள் நுழைந்ததும் அவன் பெண்ணாக மாறிவிட்டான். அவன் வந்த குதிரை கூட பெண்ணாக மாறிவிட்டது. இவை எல்லாம் பாலினங்கள் குறித்து ஒரு முன்முடிவு சார்ந்த இறுக்கமான பார்வையை குழந்தைகளுக்கு தளர்த்தி விடும். பாலினம் இரண்டுதான் அதுவும் பிறப்பு உடற்கூறு அடிப்படையில் முடிவாகக் கூடியது என்பது போன்ற மனத்தடைகளை இந்த கதைகளை கேட்டு வளர்ந்த குழந்தைகள் எளிதாக தாண்டிவிட முடியும். பாலினக்கல்வியை குழந்தைகளுக்கு அளிக்க கல்வியாளர்கள் இந்த மரபுசார்ந்த தொன்மங்களை பயன்படுத்த வேண்டும்.
இன்னும் பேசுவோம்.
No comments:
Post a Comment