திருநம்பி என்பவர் யார்? - © கோபி ஷங்கர்

திருநம்பி ராஜா, மதுரை
திருநம்பிகள் (Transmen)

பெண் என்ற கூடுபுழுவாய் வாழும் 
ஆண் என்ற வண்ணத்துபூச்சி நாங்கள்.!
எங்கள் சிறகுகளை உடைக்காதீர்கள்!

உணர்வுகள் எப்போதும் அழகியவை: பரந்தவை: நாம் அறியாத நிலையிலும் வாழ்பவை:ஆம்.! ஒரு ஆடவன் மகளிரை போலே உடை உடுத்தி கொண்டு, பெண்களை போலவே உணர்சிகள் கொண்டு, ஒரு பெண்ணாகவே வாழ்வதனை நாம் நன்கு அறிவோம்: திருநங்கைகள் குறித்த அறிதல் அதிகமாக காணப்படும் இந்த நேரத்தில், திருநம்பிகள் குறித்து நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

திருநம்பிகள் என்பவர் யார்? பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் பட்டாம்பூச்சிகள்!!! பெண்மையின் உடலில் ஆண்மையின் முழு உணர்வு!தம் மனங்களில் மட்டுமல்ல, தம் உடலையும் ஒரு ஆணின் உடலாய் மாற்றும்  விருப்பம் கொண்டவர்கள்!  இவர்களை சமூகம் எப்படி அங்கீகரிகின்ற்றது?  இதற்கு முன்பு சமூகத்தில் எத்தனை பேர் இவர்களை குறித்து அறிந்து கொண்டுள்ளனர்?

பெண் என்பவள்  குழந்தை பெற்று கொள்பவள் என்ற  கருத்தினையே நாம் இன்னும் கடந்து வரவில்லையே? பெண்ணின் விதி ஆணின் விதியுடன் இணைக்கப்பட்டுள்ளது  என்றதனை கடந்து வராத இந்த சமூகம் என்று ஒரு பெண்ணின் உடலில் ஆண்மையினை அங்கீகரிக்கும்? பெண் என்பவளை தாயாக, தாரமாக, பார்க்கும் நிலையிலிருந்து, பெண்மையிலிருந்து  ஆண்மையாய் வாழ துடிக்கும்  உயிர் துடிப்பினை,உடைய பெண்டிரின்  உணர்ச்சியினை என்று நாம் புரிந்து கொள்வோம்?

நீங்கள் உங்களை வெறுத்து ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். ஒரு பெண், தன் உடலை வெறுத்து, தன் உள்ளே வாழும் ஒரு ஆணை, மறைத்து, சமூகத்தின் கண்களுக்கு தன்னை தானே வருத்தி ஒரு பெண்ணாய்  "நடித்து", ஆண்களை போன்று வாழ வேண்டும் என்று தன்னுள் வாழும் அவாவினை உயிருடன் புதைத்து, வாழாமல் நாடகமே வாழ்வாகி போகும் நிலையினை கொஞ்சம் உணர்வோமா? பூக்களின் விளைநிலத்தில் நெருஞ்சிகள் வளரும். வளர இயலும். ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள், அந்த நிலத்தில் அந்த நிலம் விருப்பப்படும் படியே மலர்கள் மட்டுமே பூத்து குலுங்கி செழித்து வளரும் நிலை எத்தனை இனிமை?

 ஒரு பூவின் அழகியலுக்கு இத்துணை கவனம் கொடுக்கும் நாம், ஏன் பெண் உடலில் மலரும் ஒரு ஆணினை அன்கீகரிபதில்லை? நாம் சொல்லலாம். அவர்கள் மனநலம் பாதிகப்பட்ட பெண்கள். சமூகத்தின் பெண் என்ற கருத்திலிருந்து விலகுபவர்கள் என்று. கொஞ்சம் யோசித்து பாருங்கள். யார் மனநலம் பாதிக்கபட்டவர்கள்? இயல்பான ஒரு உணர்வு, நம் கண்களுக்கு இயல்பற்றது என்று தோன்றின் அதை வெட்டி எறிய அவர்களின் உணர்வினை மதிக்காத நம்மவர்கள் மன நலம் நிறைந்தவர்களோ

இந்த உடல் என்பது இறுதி அல்ல. நமக்கு ஒரு வேளை அப்படி இருக்கலாம். நமக்கு நாம் வண்ணத்து பூச்சிகள். ஆனால் திருநம்பிகள், பெண் என்ற  கூட்டுப்புழு  நிலையில் வாழும் எதிர்கால வண்ணத்து பூச்சிகள். இவர்களை அரவணைக்க வேண்டிய பெற்றோர்,மற்றும் உறவினர்கள்,அவர்களின் வண்ணத்துப்பூச்சிக்கு  இந்த வாழ்வில் கல்லறை கட்டி விடுகின்றனர். இன்னொரு கருப்பையில் தன் குழந்தை வளர வேண்டும் என்று உணரும் இவர்களுக்கு, நிகழ்வது என்னவோ தன் கருப்பையில் ஒரு குழந்தை.! வண்ணத்து பூச்சிகள் கூடுபுளுவிளிருந்து கடந்து, தன் அழகிய நிறங்களுடன் பறக்கும் பொது என்னே அழகு என்று பிரமிக்கும் நாம், ஏன் திருனம்பிகளை பெண் என்ற  கூடுபுழு நிலையில் மட்டுமே காண்கிறோம்? இதுதான் நம் அழகியலா

ஒரு பெண் என்பவள் ஒரு குழந்தைக்கு தாயாவது தான் அவள் பிறவியின் நிறைவா? ஏன் அவள் ஒரு அவனாக மாற கூடாதா? மலர்களின் உடல் மீசைகளை வளர்க்க கூடாதா? பால் சுரக்கும் மார்பகங்கள் மறைந்து மார்பு அங்கே தோன்ற கூடாதா? ஏன் அவன் கருப்பையின் தலை விதியினை அவனே தீர்மானிக்க கூடாதா? அவளுக்குள் வாழும் அவன் ஏன் சாகடிக்கபடுகின்றான்? சமூகம் வாழ, இவர்களின் உயிரும் உணர்வுகளும் பலியா?

எத்தனை வண்ணத்து பூச்சிகள் இங்கே தாம் தம் சிறகுகளுடன் பறப்பதனை ஒரு கனவாகவே வாழ்ந்து இறந்து போயிருக்கும்? இல்லை. கொல்லப்பட்டிருக்கும்? பெண்மையை தெய்வமாக வழிபடுகின்றோமே? ஏன் அந்த தெய்வங்கள் திருமணம் என்பதில் மட்டுமே அர்த்தம் பெறுகின்றனவோ? எத்தனை திருநம்பிகள் தமக்கு அந்நியமான வாழ்வில், இறந்து இறந்தே வாழ்ந்திருப்பார்? ஒரு திருநங்கை தன் ஆண் என்ற கூட்டினை உதறி எறிய முடியும் போது, ஏன் திருநம்பிகள் தம் பெண் என்ற கூட்டினை உதறி எறிய முடிவதில்லை? என்று யோனியுடன் ஒரு உயிர் இந்த உலகில் பிறக்கின்றதோ அன்றே அந்த உயிர் தன் கருப்பையில் இன்னொரு உயிரை கண்டிப்பாக சுமக்க வேண்டும் என்பது ஒரு உலகளாவிய விதி ஆகிவிடுகின்றதல்லவா? அதற்காக எத்தனை விதிமுறைகள் அவள் மேலே? கற்பும் மாதர் ஒழுக்கமும்!அவள் நெற்றியல் எப்போதும் ஒரு பொட்டு! அவள் உடலில் பாதி எடை நகையாக வேண்டும் என்று சமூக அழகியல்! எப்படி இயலும்? நாகரீகம் பெற்று விட்டோமே, அவள் நான்கு சுவர்களை இன்றும் முழுமையாக தாண்டுகின்றாளா? இப்படி ஒரு சமூக கட்டமைப்பில் அவள் எப்படி அவனாக மாறுவதை நாம் ஏற்றுகொள்வோம்?

திருநங்கைகளை ஏற்பவர்கள் கூட திருநம்பிகளை ஏற்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இங்கும் கூட பெண்ணியம் ஒடுக்கப்பட்டு ஆண் ஆதிக்கம் நிறைந்ததுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். சரி இப்போது திருநம்பிகள் குறித்து சமூகத்தின் தவறான புரிதல்களை பார்ப்போம்.

இவர்களுக்கும் லெஸ்பியன்'களுக்கும் பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை.  லெஸ்பியன்'கள் தாங்கள் உடல் ரீதியாக பெண்ணாக இருக்கவே விரும்புவார்கள், அதேநேரத்தில் பால் ஈர்ப்பில் பெண்ணையே விரும்புகிறார்கள். ஆனால், திருநம்பிகளோ உடல் ரீதியாக ஆணாக மாறிட விரும்புவார்கள், பெரும்பாலும் பெண்ணின் மீதே உடல் கவர்ச்சி ஏற்படும் (சில நேரங்களில் திருநம்பிகள் ஆண்கள் மீதும் ஈர்ப்போடு இருப்பதையும் அரிதாக காணமுடிகிறது).  சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உடல் ரீதியாக ஆணாக மாற நினைப்பார்கள் திருநம்பிகள். தாங்கள் பெண்ணாகவே இருக்க விரும்பினாலும், மற்ற பெண்கள் மீது மட்டுமே ஈர்ப்பு வருவது லெஸ்பியன். பிறப்பால் ஆணாக கருதப்படும் ஒரு நபர், பெண்ணாக மாறி திருநங்கையாக மாறுவதில் இருக்கும் சுதந்திரமும், மக்கள் புரிதலும், தெளிவும், மனநிலையும் ஆணாக மாற நினைக்கும் ஒரு திருநம்பிக்கு எளிதாக கிடைக்காததற்கு காரணம் போதிய விழிப்புணர்வின்மை என்றே சொல்லவேண்டும். திருநங்கைகளுக்கு உண்டான வரலாறுகள் போல திருநம்பிகளுக்கும் உண்டு என்பதையும் நாம் நோக்க வேண்டும்.

 இமயமலை அடிவாரத்தின் வடகிழக்கு இந்திய பகுதியில் வாழும் ஒரு பழங்குடியின இனமான "காடி" மக்களிடம் உள்ள ஒரு முறை "சாதின்". சாதின் என்ற முறைப்படி அந்த இனத்தின் சில பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்கள் செய்யும் வேலைகளை செய்து, ஆண்களை போல சிகையலங்காரத்தோடு சமூகத்தில் வாழ்கின்றனர். இந்து புராணங்களில் ராதையின் ஆண் வடிவமாக "காதரா" என்பவர் வழிபடப்படுகிறார். (கிருஷ்ணரின் அரவான் வடிவம் மக்களை சென்றடைந்த அளவு, இந்த காதரா மக்களை சென்றடயாதது ஏன்? என்று தெரியவில்லை). 

சிலர் இந்த திருநம்பிகள் என்பவர்கள் நவீன மருத்துவத்தின் விளைவாக கூறுகிறார்கள். அதாவது, ஹார்மோன் சிகிச்சை மூலம் இப்படி நிகழ்வதாக காரணத்தை கூறுகிறார்கள். நிச்சயம் உண்மை அப்படி இல்லை. விஞ்ஞானமும், மருத்துவமும் வளரும் முன்னரே இப்படி திருநம்பிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தகைய திருநம்பிகள் ராணுவத்தில் கூட வேலை பார்த்தனர். உடல் ரீதியாக அப்படிப்பட்டவர்கள் பெண்கள் என்பது பலநேரம் அந்த நபர்களின் இறப்பிற்கு பிறகே தெரிய வந்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

ஆக, இது நாகரிக உலகின் புதுவரவு இல்லை என்பதையும், இது தவறும் இல்லை என்பதையும் புரிந்து, தங்கள் சுயஅடையாளத்தோடு சுதந்திரமாக பறந்திட அந்த பட்டாம்பூச்சிகளுக்கு வழிவிடுவோம். நம் இந்தியாவில் வெளிப்படையாக திரையுலகில் வேலை செய்யும் திருநம்பி சத்யா ராய் நாக்பால் இவர் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றார்
இவர் பணியாற்றிய படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்க பட்டுள்ளது. 



No comments:

Post a Comment