பாலினப் பாதுகாப்பின்மை - கேட் பார்ன்ஸ்டெய்ன் ( மொழிபெயர்ப்பு - ஸ்ரீதர் ரங்கராஜ்)


பாலினம் என்கிற பாதுகாப்புக்கு வெளியில் இருப்பவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
பாலினம் என்கிற விஷயத்தைப் புறக்கணிப்பவர்கள். எந்தவொரு வடிவிலும் உருவிலும் தன் பாலினத்தைப்புறக்கணிப்பவர்கள், ‘ஒரு ஆண் இதைச் செய்யக்கூடாது; ஒரு பெண் அதைச் செய்யக்கூடாது’ என்று இரு பாலினங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளதை மீறுபவர்கள்தான் அவர்கள். உண்மையில் பல்வேறு நாகரிகங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இருந்துள்ளன. ஆனால் முதன்மைப் பாலினங்களாகக் கலாசாரம் ஏற்றுக்கொண்டதில் சேராதவர்கள், தங்களைத் தாழ்வு நிலையிலிருந்து அகற்றிக் கொள்ளச் சமூகப் பாலினப் பாதுகாப்பிலிருந்து வெளியேறுகிறார்கள். நீங்கள் இயற்கையின் விதிகளோடு முரண்படுகிறீர்கள். அதுவே உங்களைப் பாதுகாப்பின்மைக்குள் தள்ளுகிறது.

உங்கள் புத்தகத்தில் சமூகத்தின் உறுதியான பாலின அடையாளங்களைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே உங்களின் முழுமையை உணர முடியும் என்று எழுதியிருந்தீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சார்ந்திருப்பது நம்மைப் பிணைத்து வைத்திருக்கும் என்கிறீர்கள்?

பிணைப்பு என்பது உங்களை நகர விடாமல் வைத்திருப்பது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் இயங்காத,அல்லது குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் இயங்காத ஒன்றை எவ்வாறு அடையாளப்படுத்துவது? நம் பிடிக்குள் வராத, நம் எல்லைக்குள் இல்லாத ஒன்று நம் முழுமையைப் பாதிக்கிறது. பெண்ணிய இயக்கங்கள், பெண் என்ற அடையாளத்தின் மூலம் உங்களின் முழு வீச்சு எவ்வாறு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது, என்பதை உணர்ந்துள்ளன. அது போலவே ஆண்களின் அமைப்பும். ஆனால் வெகு சிலரே ஆண்களும், பெண்களும் மட்டுமே உள்ள ஒரு சமூகம் எவ்வாறு தம்மைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் மொழியில் ‘விடுதலை’ என்பது என்ன?

என்னைப் பொறுத்தவரையில் விடுதலை என்பது ஆபத்தில்லாத விழுமியங்களை வெளிப்படுத்துவதே என்பேன். இவ்விழுமியங்கள் அடையாளங்களோடு பிணைக்கப்பட்டுள்ளது. இவ் அடையாளங்கள் சமூகத்தால் வழங்கப்பட்டவை. குறிப்பிட்ட வயது வரை ‘நான் டேவி க்ராக்கெட் ஆக விரும்புகிறேன்’ என்றோ ‘நான் இளவரசி டயானாவாக விரும்புகிறேன்’ என்றோ நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். வளர்ந்தபின் அதைச் சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சாகும் வரை நான் குழந்தைதான். எனவே  விடுதலை என்பது ஆபத்தில்லாத என் வாழ்க்கை விழுமியங்களை வெளியிடுவதுதான்.

சிலர் சொல்கிறார்கள் பாலினத்துடனான சுதந்திர உறவு மற்றும் உங்களின் பாலின இருமையின் மூலம் மனிதனின் பண்புகளையும் ,திறமைகளையும், பங்களிப்பையும் முழுவதும் உணர முடியும் என்று. இன்னும் சிலர் பாலின விடுதலை என்பது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதின் அனுபவம் மற்றும் தங்கள் பாலினத் தன்மையின் வெளிப்படுத்துதல் என்பதுதான் என்கிறார்கள். இந்த இரு வேறுபட்ட கருத்துகளில் உங்கள் நிலை என்ன?

நான் இவ்விரண்டிலும் எந்த வேறுபாடும் இருப்பதாக நினைக்கவில்லை. அவை பாலின விடுதலைக்கான படிகள் என்று சொல்வேன். முதற்படி நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாக, முழுமையாக இருப்பது. அதாவது நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ அதில் முழுமையாக இருங்கள். அதுதான் சுலபமான முதற்படி. அது உங்களுக்குப் போதவில்லையெனில் இரண்டாம் படி, முழுவதும் உணர்வு மயமானதும், இருமையாய் இருப்பதும். இந்நிலையில்தான் உங்களால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள நிலை  என்பது என்ன? என்று கேட்க முடியும். இந்நிலை உங்களை வெளியிட உதவுகிறதா?உங்களால் இவ்விருமை நிலையிலிருந்து உங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என முயற்சித்துப் பாருங்கள். முடியவில்லையா! இப்போது உங்களுக்கு மூன்றாவதாக ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது இவ்விருமை நிலையிலிருந்து வெளிவருவது, இரு எதிர் துருவங்களிலிருந்தும் வேறுபடுவது. ஆண்ட்ரோ மற்றும் கைனி (ஆண்மை, பெண்மை) எனும் இரு பாலினங்களின் இடையே உள்ள இடைவெளியினைச் சுற்றிப் பாருங்கள். உங்களால் அந்த இடத்திலிருந்து உங்களை வெளிப்படுத்த முடிகிறதா என்று பாருங்கள்.

எனவே நீங்கள் குறிப்பிட்ட அவ்விரண்டும் முரண்கள் என்று சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அவை படிநிலைகள்தாம். தேவை நீங்கள் உங்களை வெளிப்படுத்துவது, இதில் பாலினம் ஒரு தடையல்ல. அதுவும் போதவில்லையா? இனம், வயது, வகுப்பு என முயன்று பாருங்கள். நான் முதலில் ஒரு ஆணாகவும், பின் இருமை நிலையிலும், பின்பு பெண்ணாகவும், மீண்டும் சற்று மேம்பட்ட ஆணாகவும் முயற்சித்துப் பார்த்து விட்டேன். தற்போது நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. அதைத் தாண்டிய மூன்றாம் நிலையில் இருக்கிறேன் இப்போது நான் ஆண், பெண் மற்றும் அனைத்துப் பாலினங்களின் கலவை.

ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பாலின வேறுபாடுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்கிற வரையறை இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் இந்த கிரகத்திலிருக்கும் பாலின வரையறைகள் எனக்கு உதவாது என்னும் நிலைக்கு வந்து விட்டேன். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு விட்டேன். எனக்கான ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு வாழத்தொடங்கி விட்டேன். ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து பார்த்தாயிற்று. இவ்வுலகின் எந்தவொரு கலாசாரமும் இதைத் தவிர வேறு ஒரு பாலினத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. பின் எதற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். லாவோட்ஸு சொன்னது போல “துவந்துவமாக இருக்கும் முறைகளில் இருந்து விடுதலை பெறுமுன் நீங்கள் முதலில் அதிலிருந்து வெளியில் இருக்க வேண்டும்”. இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தரக் கூடிய ஒரு கலாசாரத்தினை என்னால் வழிமொழிய முடியாது. பாலினம் என்பது உங்கள் அடையாளம் என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில் அது ஒருவராலும் ஆராயப்படாததாகவும் உள்ளது. அவ்வுணர்வு வெறும் தானியங்கி.

பாலினத்திற்கும், பாலின மாறுபாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் இருமை என்ற தாழ்வு நிலையிலிருந்து பாலினத்தை பன்மைக்கு உயர்த்துவதே ஆகும். அதுதான் இன்றைக்கு அநேக கலாசாரங்களுக்குத் தேவைப்படுவது.

பாலின வேறுபாடுகளை ஆண் அல்லது பெண் என்கிற உடலில் இருந்து கொண்டு தாண்டிச் செல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. உங்கள் உடல் ஆணா அல்லது பெண்ணா? யாருடைய தீர்மானம் அது? என்னுடைய உடல் ஆணா? பெண்ணா? ஆணுடல் என்றால் என்ன? பெண்ணுடல் என்றால் என்ன? நீங்கள் அதற்கான விளக்கமாகத் தரும் வார்த்தைகள் மிகக் கனமானவை. சரியாக இதுதான் ஆணுடல் இதுதான் பெண்ணுடல் என்று நீங்கள் விளக்கும் வரை இதற்கான பதிலைச் சொல்வது சிரமம். எனக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியாது. இந்தக் கேள்விக்கு அநேகமான பதில்களை வைத்திருக்கும் அநேகம் பேரைத் தெரியும், நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. சொல்லுங்கள் ஆணுடல் என்பது என்ன?

எனக்குத் தெரிந்தவரை XX மற்றும் XY குரோமோசோம்கள்தான் அவை.
நீங்கள் உங்கள் க்ரோமோசோமைப் பரிசோதித்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.
பின் எப்படி உங்களுக்குத் தெரியும் உங்களுடையது ஆணுடலா பெண்ணுடலா என்று? உண்மையில் க்ரோமோசோம்களில் பதிநான்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. XX, XY, XXY, YYX, XO, XXX, XOX. . . . என்று. ஆனால் உண்மையில் அத்தனை பாலினங்கள் இருக்கிறதா என்ன? ஆக பாலினம் என்பது க்ரோமோசோம் அடிப்படையில் இல்லை.

ஆனால் நம் உடலுக்கு இரண்டாம் நிலைப் பாலின அடையாளங்கள் உள்ளனவே, மார்பகங்கள், முகத்தில் வளரும் முடி போன்றவை. மேலும் நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட பாலினமாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறோம், நம் உடை மற்றும் தலையலங்காரம் மூலமாக. நான் கேட்க விரும்புவது ஆணென்றும் பெண்ணென்றும் அடையாளப்படுத்தப்படும் உடலில் வாழ்ந்து கொண்டு இதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதன் சாத்தியக்கூறுகள் பற்றி?

நிறையப்பேர் எனக்குப் பெண்ணுடல் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அதை முதலில் மறுப்பது நான்தான். எனக்கு ஆண்குறி உண்டா எனில், ஆம் இருக்கிறது. ஆனால் உள்ளிருந்து வெளிப்பக்கமாகத் திருப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஆணுறுப்புதான். எனக்குப் பெண்ணுறுப்பு இருக்கிறதா? இல்லை. ஆனால் பாலின உறுப்பு வகைப்பாட்டியலின்படிப் பார்த்தால் எனக்கிருப்பது உள்வாங்கிய அமைப்பு, வெளிநீண்ட அமைப்பல்ல. அதுபோன்று உங்களால் மார்பகங்களோடு ஒரு ஆணைப் பார்த்திருக்க முடியாது. நான் என்னை விடப் பெரிய மார்பகங்களோடு ஆணைப் பார்த்திருக்கிறேன். உங்கள் ஆடையிலிருந்து உங்களுக்கு மார்பகங்கள் இருக்கிறதா என்பது தெரியாது. தொப்பி வைத்திருந்தால் உங்கள் தலைமுடி எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாது. எனவே வெளித் தோற்றத்திலிருந்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள முடியாது.எனவே அது தலை முடியோ மார்பகங்களோ அல்ல. அப்படியென்றால் ஹார்மோன்களா? உங்களுக்குத் தெரிந்திருக்கும் டெஸ்டோஸ்டீரான் மற்றும் எஸ்ட்ரோஜன், அவைதான் எல்லாம் என்றால் உங்களால் பாலினத்தை மருந்துக் கடைகளில் வாங்க முடியும். எனவே ஆண் மற்றும் பெண் என்பது சார்ந்த கேள்விகளுக்கு சரியான விளக்கம் இல்லாமல் என்னால் பதில் சொல்ல முடியாது.

பாலினத்தின் எத்தகைய கூறுகளை உயிரியல் சார்ந்தது மற்றும் தனித்துவமானது என்று பிரிப்பீர்கள்? உங்களுக்குத் தெரிந்த பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டவர்கள் அப்பார்வையை மாற்றியதுண்டா?

அது சுலபம். என்னைப் பொறுத்த வரை அளவிடக்கூடிய எல்லாமும் உயிரியல் சார்ந்தது. மற்றவை அனைத்தும் அகவயமானது, தனித்துவமானது. பாலின அடையாளங்கள், ஹார்மோன், க்ரோமோசோம் மற்ற கேட்கும், பார்க்கும், நுகரும், தொடும், அளவிடக்கூடிய அனைத்தும் உயிரியல் சார்ந்ததே. ஆனால் ‘நான் இந்த ஆடையை அணிய விரும்புகிறேன்’ என்பது தனித்துவமானது.

உளவியல் சார்ந்த, உணர்வு சார்ந்த அல்லது நடத்தை சார்ந்த எதையேனும் உயிரியல் சார்ந்து பார்க்கிறீர்களா? அல்லது அவை கலாசாரம் சார்ந்தது என்பீர்களா?
இந்த உரையாடலை ஒரு நிமிடம் பின்னோக்கிச் செலுத்தலாம்,இல்லையெனில் இதே இடத்தில் அது மாட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் பாலினம் என்று குறிக்கும்போது ஆண் மற்றும் பெண் என்றுதான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறீர்களா?

ஆமாம்.
அப்படியானால் எனக்கு அது சிரமமாக இருக்கும். இப்படி வைத்துக் கொள்ளலாம். பாலினம் என்று பேசும்போது இனி சிறுவன், சிறுமி, ஆண், பெண், ஆணிலிருந்து பெண்ணானவர், பெண்ணிலிருந்து ஆணானவர் என்று ஆறு பாலினங்களைக் குறிப்பிடுவதாகக் கொள்வோம்.
சரி, இப்போது என்னில் நானே முரண்பட்டுக் கொள்கிறேன். டெஸ்டோஸ்டீரான் உங்களுக்கு ஆண் தன்மையை, கோபத்தைக் கொடுக்கும். எஸ்ட்ரோஜன் மனிதரின் பாலின ஈர்ப்பை மாற்றியமைக்கக் கூடியது, எனக்கு அது நடந்துள்ளது. ஆனால் எஸ்ட்ரோஜனும் டெஸ்டோஸ்டீரானும் முறையே ஆண் பெண் என்று யார் சொன்னது? உங்கள் உடலில் உள்ள XY க்ரோமோசோம் உங்களின் குறிப்பிட்ட நடத்தையை-

புரிகிறது, சில நடத்தைகள் உடற்கூறு சார்ந்தது அதை நாம்தான் ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.

மிகச்சரி. இல்லையெனில் அது அர்த்தமற்றதாகிவிடும்.  உங்களுக்கு டெஸ்டோஸ்டீரான் கொடுத்தால் உங்கள் முகத்தில் முடி வளரலாம், அதனால் நீங்கள் ஆணாகி விடுவீர்களா? உங்களுக்குத் தெரியுமா? தொடர்ந்து டெஸ்டோஸ்டீரான் கொடுக்கப்பட்டால் உங்களின் க்ளிடோரிஸ் மூன்றிலிருந்து நான்கு அங்குலம் வரை வளரும். அது பார்க்க எப்படியிருக்கும்? அதை நீங்கள் பெண்ணுடல் என்பீர்களா? இது போன்ற விஷயங்களைப் பற்றி நினைக்கையில் சிரிப்பதே ஞானத்தின் அடையாளம் என்பேன், அதன் பின் உங்கள் அடிப்படைப் பாலினக் கொள்கையென்பது இது அல்லது அது என்பதனால் கட்டமைக்கப்பட்டு இருக்காது. உங்களின் சில கேள்விகளைப் புரிந்துகொள்ள நான் சிரமப்படுகிறேன் ஏனெனில் அவை இது அல்லது அது என்ற கருத்தை உடையனவாயிருக்கிறது.

உங்கள் ‘பாலினப் பாதுகாப்பின்மை’யில் பாலின விடுதலை என்பது  சுதந்திரமாக வேறுபட்ட பாலின அடையாளங்களுக்குள் மாறுவது என்று கூறினீர்கள்.
பலதரப்பட்டவற்றுக்குள்.

ஆனால் இதில் மற்றொரு நோக்குமிருக்கிறது, அதைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும். ஆன்மீகப் பயிற்சியளிக்கும் பெரும்பாலானோர் அடையாளங்கள் அத்தனையும் துறப்பது என்பதில் பாலின அடையாளத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பாலினத்தைச் சார்ந்திருப்பதும் அல்லது விலகியிருப்பதும் கூட உங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாகலாமில்லையா? அதாவது குறிப்பிட்ட பாலினம், பாலின மாறுபாடு அல்லது பாலினமே இல்லை என்ற தத்துவத்தைச் சார்ந்திருப்பதால்?
ஆம். அப்படிச் சார்ந்திருந்தால் அது நிச்சயம் ஒரு தடையாக இருக்கும்.

இது ஒரு நுட்பமான கேள்வி. தன்னிடத்தில் உள்ள பாலின அடையாளங்களையும், தன்னைப் பற்றிய சுயபிம்பத்தையும் துறப்பதன் சாத்தியக்கூறு பற்றிக் கேட்கிறேன், அவற்றைத் துறந்து விடுவதும் பின் ஒவ்வொரு கணத்திலும் இயற்கையாகவும், திடீரென்றும் ஏற்படும் அதை உணர்வதும், அதே சமயத்தில் பாலினத்துக்கான தன்மை மற்றும் சுபாவங்களை மறுக்காமலும் ஒதுக்கிவிடாமலும்,  ஒழுங்குபடுத்தாமலும், அல்லது அது சார்ந்த முன்முடிவுகளோடு இருப்பதைத் தவிர்ப்பதும் சாத்தியமா?

நீங்கள் கேட்பது ஒரு உயர்ந்த நிலை. எனக்கு அது சாத்தியம். ஏனெனில் என் வாழ்க்கை முழுதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், நாற்பது வருடங்களுக்கும் மேலாக இதைப் பற்றிக் கவனமாக ஆராய்ந்திருக்கிறேன். நான் அறிந்தவற்றை என் வாழ்க்கையின் மற்ற பகுதிகளுக்குப் பயன்படுத்துகிறேன்.

பாலினப் பாதுகாப்பின்மையில் நீங்கள் விவரித்தது போல பாலின மாற்றம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் வேறுபட்ட பாலினங்களில் மாறி மாறி இருப்பதைப் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குள் சிக்கிவிடாது, தேர்ந்தெடுக்கக் கிடைக்கும் அத்தனை சாத்தியக் கூறுகளையும் வாழ்ந்து பார்ப்பது தெரிகிறது. நான் இதைப் பற்றிய சிந்தனை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

இல்லை, இதை அனைவருமே செய்கிறார்கள், நாங்கள் மட்டுமல்ல. இதில் நாங்கள் எந்த அளவுக்குச் சுயவுணர்வோடு ஈடுபடுகிறோம் என்பதுதான் வேறுபடுகிறது.

உண்மைதான். இந்தப்பாத்திரங்களை ஏற்பவர்களும் தம் பாலினத்திற்கான சுய உணர்வோடும் மிகையாகவும்தான் நடிக்கிறார்கள். அது இப்படிப்பட்டவர்களைப் பாதிக்கும். ஆனால் இருபாலின ஆண்களும், பெண்களும் ஒப்புக் கொள்ளும் அளவில் இதைச் செய்கிறார்கள்.
நான் ஜான் வேய்ன், மர்லின் மன்றோ, ப்ரூஸ் வில்லிஸ், ஜீனா டேவிஸ் ஆகியோரைக் குறிப்பிட இருந்தேன்.


சரிதான். இருப்பினும் ஆன்மீக விடுதலை என்பது சுயமில்லாது இருப்பது. ஒரு பாலினமாக இருப்பதற்கும் அந்தப்பாத்திரத்தை ஏற்றுக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு பற்றி என்ன சொல்கிறீர்கள்.
நான் அதில் எந்த வேறுபாடும் இருப்பதாய் நினைக்கவில்லை. அது ஒரு நிலையிலிருந்து உங்களை மறு நிலைக்குக் கூட்டிச் செல்வதுதான். ஒருவகையில் இந்த இருமுனைகளிலிருந்தும் விடுபட்டு இவ்விரண்டு பாலினங்களும் என்னவென்று புரிந்து கொள்வதும், அவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என்பதைத் தேர்வதும் முக்கியம். எந்தப்பாலினமும் சாராதிருப்பதால், அதாவது எந்தப் பாலினத்திலும் நிலைக்காதிருப்பதால் நம்மால் எந்தப் பாலினத்தின் செயல்களிலும் ஈடுபட முடிகிறது, எந்தப் பாலினத்தினாலும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை ஏற்படுத்த முடிகிறது, பாலினங்களின் அனுபவங்களை அனுபவிக்க முடிகிறது. இதுவும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்தான். ஆணால் சில வேலைகளை செய்ய முடியும், அது பெண்ணால் முடியாது.


ஆனால் இதுவும் சுய உணர்வோடுதானே இருக்கும்.
ஆம். இது ஒரு பாதை.

என்ன சொல்ல வருகிறீர்கள்?

பாலின மாறுபாடு என்பதில் நுழைவதற்கு முன் நீங்கள் முழு உணர்வோடு முதன்மைப் பாலினங்களின் பாத்திரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டும்.


பாலின மாறுதலில் இதுதான் வழி என்கிறீர்களா?
இது கடினமான வழிதான், ஆனால் கலாசாரத்தால் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே வழி இதுதான். இது உங்களை வெளிப்படுத்தும் வழி. ஆனால் நீங்கள் இந்த மாறுதலுக்கு முன் இந்தக் கலாசாரத்தால்,சமூகத்தால் எப்படி நடத்தப்படுவீர்கள் என்பதைச் சிந்தியுங்கள். பெரும்பாலானோருக்கு பாலினம் என்பதிலிருந்து விலகியிருப்பதும் அதை மறந்து விடுவதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.


நான் இதிலிருந்து மாறுபடுகிறேன்.
நான் மேலும் மேலும் பாலினம் என்பதிலிருந்து விடுபடுதல் எனும் நிலைக்கு வந்துவிட்டேன் என்கிறேன். நீங்கள் ஆண் மற்றும் பெண் என்பதிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்று நினைக்கிறேன்.


ஆமாம்.
நீங்கள் குறைந்தபட்சமாகவேனும் உங்களை பாலினத்துக்கு முக்கியத்துவம் தராதவராக உணர்வீர்கள்-அல்லது அது ஒரு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்காது. ஆனால் இன்றிரவு படுக்கைக்குப் போகும்போது நீங்கள் பெண் என்று உணர்ந்தவாறு செல்வீர்கள். நான் அதை ஒருபோதும் செய்ததில்லை படுக்கைக்குச் செல்லும்போது நான் ஆணென்றோ பெண்ணென்றோ ஒரு போதும் நினைத்ததில்லை. எப்போதும்.


உண்மை; ஆனால் என் அனுபவம் வேறாக இருக்கிறது. பாலின அடையாளங்களைத் தாண்டி இருப்பது என்பதில் மற்றொரு அணுகுமுறையும் இருக்கிறது. பெரும்பாலான ஆன்மீகப் பயிற்சிகள் உங்களை லௌகீக உலகில் மூழ்கடிக்கக் கூடிய விஷயங்களிலிருந்து மாறச் சொல்கின்றன, காலம் தாண்டிய, எண்ணம் தாண்டிய, அண்டவெளியைத் தாண்டிய, மனதைத் தாண்டிய ஒன்றோடு ஒன்றுவது பற்றிப் பேசுகின்றன. ஆனாலும் நாம், நம் பாலினமாகவே இருக்கிறோம். ஆனால் அது ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படைக் குறியீடோ அல்லது மறதியோ அல்ல. 

நாம் நம் உடலோடே இருக்கிறோம், இவ்வுடலுக்கான வெளிப்பாடுகளை வெளியிடுகிறோம், இயற்கையாக, ஆனால் அதை முனைந்து செய்யாது, நடிப்பாகவோ, வேறெவ் பாதிப்போ இல்லாமல். அது மர்லின் மன்றோ போன்றிருந்தாலும் சரி அல்லது ஓர்பால் ஈர்ப்புடையவர் போலிருந்தாலும் சரி, அது வெறும் அபிநயமாகவே இருக்கும். சரிதானே?

அபிநயங்கள் எப்போதுமே விளையாட்டுத் தன்மையுடையவை. அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன. ஜென் துறவிகளில் பலர் இப்படிச் சிரிக்க வைத்தவர்கள்தான். தாவோவின் குருக்களும் அப்படியே. சுவாங் ட்ஸூ ஒரு புரட்சிக்காரர். இன்றைக்கு இருக்கும் பலரை விட மிக உயர்ந்தவர்.

நீங்கள் இது அல்லது அது எனும் கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நல்லது, கெட்டது என்றால் என்னவென்று தெரியாது, சரி, தப்பு என்றால் என்னவென்று தெரியாது. எனவே மீண்டும் என்னுடன் நான் முரண்பட்டுக் கொள்கிறேன். நீங்கள் அத்தனை பாலினங்களின் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால்தான் பாலின விடுதலை அடைய முடியுமா? என்றால், இல்லை. நீங்கள் இந்தப் பாலினம் என்பது எப்படிப்பட்ட விழுமியங்களைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்று சோதிக்க வேண்டும். விழுமியங்களில் இருந்து உங்களின் பாலினப் பார்வையை அகற்ற வேண்டும். உண்மையில் அவ்விழுமியங்கள் எதற்காக உள்ளனவோ அதற்காக அவற்றை பாலினம் சாராது ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உங்களின் அடையாளம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? ஆணென்கிற அடையாளத்தோடு உங்களைப் பார்க்கும் மற்றவர்களின் பார்வை எவ்வளவு முக்கியமானது? பெண்ணென்கிற அடையாளத்தோடு எவ்வளவு முக்கியமானது? உங்களிடத்திலும், என்னிடத்திலும், ஆணென்றும், பெண்ணென்றும் மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துகிற அல்லது அதிகரிக்கிற விஷயங்கள் என்னென்ன? அதுதான் பாலினத்தோடு உங்களைத் தொடர்புபடுத்துகிறது.


இதைச் சரியான முறையில் எப்படி அணுக வேண்டும்?
என்னைப் பொறுத்தவரையில் துணிந்து செய்வதுதான். என் புறத்தோற்றத்தை நீங்கள் கவனிப்பதைப் பற்றி நான் கவலைப்படாமலிருப்பது. என்னால் அதை எள்ளலுடன் கடக்க முடிவது. போதிசத்துவர் சொன்னது போல: உங்களைத் தாழ்வுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ள விதிகளை விட்டு வெளியேறுங்கள்.

விதிகளை விட்டு வெளியேறுபவர்கள் மற்றவர்களை விட பலத்துடன் இருக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் சமூக, கலாசார, மதக் கட்டளைகளிலிருந்து வெளியேறத் துணிகிறார்கள். வெளியேறியவுடன் கிடைக்கும் சுதந்திரம் மற்றும் ஆற்றல், நம்மை, இதிலிருந்து வெளியேறத் துணிவில்லாதவர்கள் பயத்துடனும், வியப்புடனும் பார்க்க வைக்கிறது. நீங்கள் இது போன்று பல தளைகளை உடைத்தெறிந்தவர். அதை மறைக்க முயலாது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவர். தளைகளை உடைத்தெறிகையில் ஏற்படும் பலத்தை அனுபவித்திருக்கிறீர்களா?

ஆம், சில விஷயங்களை நான் தகர்த்திருக்கிறேன். தடைகளை உடைப்பதென்பது சமுதாயத்தில் ஒரு மனிதனைக் கீழானவனாகக் காட்டும். இதில் அபத்தமான உண்மை என்னவென்றால் அதுதான் அவனுக்குப் பலம். ஒரு முட்டாள் அரச பதவியில் இருப்பது போல். இதைத் தகர்த்தெறிந்த பின் உங்களுக்கு ஏற்படும் சுதந்திரமென்பது சமூகம் தரும் அவமானம் எனும் சவுக்கடியிலிருந்து விடுதலை. என்னை அவமானப்படுத்த முடியாது. என்ன செய்ய முடியும் உங்களால்? என்னை வேறு பெயர்களால் அழைப்பீர்களா? நான் கண்டு கொள்ளப் போவதில்லை. உள்நகைப்போடு என்னை  ‘லெஸ்பியன்’ என்பீர்களா? ஆமாம் என்று சொல்வேன். நீ ஒரு ஆண் என்பீர்களா? சரிதான் என்பேன். அல்லது ’குறியை அறுத்துக் கொண்டவன்’ என்றால் ’இல்லை அதை வெளிப்பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்’ என்பேன். நான் அவமானப்படும் விஷயங்கள் மிகக் குறைவு, இதுதான் சுதந்திரம்.

பாலினம் தனக்கென்று சில சமூகப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்; மறுப்பது என்ற முடிவெடுத்தால் நீங்கள் அவமானம் அடைய நேரிடும் - அதை ஒரு விளையாட்டாக நீங்கள் எடுத்துக் கொள்ளும்வரை. இது ஞானத்தை நெருங்கிய நிலை.  “ஆமாம்,எனக்கு இது பிடித்திருக்கிறது அதனால் செய்கிறேன்”என்பது. ஒரே சமயத்தில் ஆண், பெண், சிறுவன், சிறுமி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன், ஆசிரியர், மாணவர் என்று எத்தனை பாத்திரங்கள்? மாறி மாறி மாறி மாறி மாறி…….. ஞானமடைந்தது போல் இருக்காது? கடைசியில் நான் உணர்ந்து கொண்டுவிட்டேன், இச்சமூகத்தில் என்னை நிறைக்கக் கூடிய ஒரு சமூக அடையாளம் இல்லவே இல்லை. எனக்குப் பிடித்த பாத்திரங்களில் ஒரு வானம்பாடி போல் திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை நாளை விடிந்ததும் பரிணாமம் மூலமாக அனைவருமே பால்மாறுபாடு அடைந்து இம்முதன்மைப் பாலினங்களிலிருந்து மாறிவிட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்?
முதலில் வியக்கத்தக்க வகையில் மக்கள் எக்குத்தப்பாக இருப்பார்கள். தம் பாலினத்துக்குரிய செய்கைகள் எதுவுமிருக்காது. இவ்வுலகில் வாழவும், மற்றவரோடு பழகவும் அவர்கள் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண்களுக்கான எதையும் அவர்களால் உபயோகப்படுத்த முடியாது. ஆண் மற்றும் பெண் என்பதை மட்டுமே சார்ந்து இவ்வுலகில் எவ்வளவு விஷயங்களிருக்கிறது தெரியுமா? இரண்டையும் தவிர்த்து முயற்சி செய்து பாருங்கள். ஒரு மீசை வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் மக்களைத் திகைக்க வையுங்கள். அல்லது சுலபமாக இதைச் செய்யலாம், இம்மூன்று கேள்விகளை உண்மையாக உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். ஆணென்பது என்ன? பெண்ணென்பது என்ன? நாம் ஏன் இது அல்லது அதில் இருக்க வேண்டும்? உலகில் பெரும்பாலானோர் இம்மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டால் இந்தப் பூமியே மாறிவிடும்.

பாலின  அடையாளம் குறித்த இக்கேள்விகளை உங்களைப் போலவே மற்றவர்களும் ஆன்மீக வழியில் கேட்க வேண்டும் என்று சொல்வீர்களா?

ஞானத்தை அடையும் வழிகளில் ஒன்று, பாலினம் வழியாக அடைதல். பாலினம் என்பதை வைத்து வழங்கப்படும் சலுகைகளிலிருந்து விடுபடுவது. அதுதான் நான் செய்தது. ‘அழகான பெண்’ ‘ஊமைப் பெண்’ எனும் சலுகையையும் உதறி விட்டேன். இது இப்போது ஒரு விளையாட்டு போலாகிவிட்டது. நான் சொல்வது இதைத்தான், சிலருக்கு தியானத்தின் வழியை ஆராய்வதை விடவும் பாலின வழி எளிதாக இருக்கும். தியானம் என்பதே ஒருநிலைப்படுத்துதல்தான். பாலினத்தை மாற்றியமைக்க எவ்வளவு ஒருமுகப்படுத்துதல் தேவையென்று தெரியுமா? இதுவும் தியானப் பயிற்சிதான். கணக்கற்ற விஷயங்களில் மிக நுட்பமாக கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் செய்து விட முடியாதென்றாலும் இயன்றவரை உங்கள் கவனத்தைப் பல இடங்களில் குவியுங்கள், மற்றவற்றை விட்டுத்தள்ளுங்கள். அதுதான் தியானம். நீங்கள் ‘ஜென்னும், பாலினப் பராமரிப்புக் கலையும்’ என்பதில் இருந்தால் அதுவும் ஒரு தியான முறைதான். நான் சொல்வதெல்லாம் பாலினத்தில் கவனத்தோடு இருப்பின் அது ஞானத்துக்கான வழி என்பதுதான். அது என்னை வெகு தொலைவுக்கு நடத்திக் கொண்டு வந்துள்ளது, விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், எனக்குப் புரியாதவற்றை ஏற்றுக் கொள்ளவும், என்னுடைய நகைச்சுவையுணர்வை அதிகப்படுத்தவும் வேறெதையும் விட உதவியிருக்கிறது.

No comments:

Post a Comment